அரசியலில் ஆழம் பார்க்கிறேன்: விஜய்

Saturday 22 August 2009



புதுக்கோட்டை மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

’’ஏன் இந்த இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றக்கூடாது என்று கேட்டனர். நான் பிளஸ்-2 படித்து முடிக்கும் போது நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை என் தந்தையிடம் கூறினேன். அதற்காக பெரிய போராட்டமே நடந்தது.


அதற்கு என் தந்தை என்னிடம் நீ நடிகன் ஆக வேண்டுமானால் அதற்கு உன்னை நீ தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதற்காக நான் 6 மாதம் கடினமாக உழைத்தேன். நாளை தீர்ப்பு என்ற படத்தில் முதலில் நடித்தேன்.

எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்.

எனது பாதை கடினமானது. பல சறுக்கல்கள், கிண்டல்கள் இருந்தன. இதையும் தாண்டி உங்கள் முன் வந்துள்ளேன். நான் எதில் காலை வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும், வேகமும் இருக்கும்.

அரசியல் என்பது சினிமா கதை போன்றது அல்ல. சினிமா என்பது ஒரு சிறிய வட்டம். ஆனால் அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அந்த கடலில் விழுவதற்கு முதலில் ஆழத்தை பார்க்க வேண்டும்.

நான் தற்போது பல தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான்

Comments

No response to “அரசியலில் ஆழம் பார்க்கிறேன்: விஜய்”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment